சிகப்பு நிற பூனை ஒன்று

பூனை நிறம் மாறிய கதை

சிகப்பு நிற பூனை ஒன்று

கணவன், மனைவி, பத்து மாத குழந்தை, அப்ப அப்ப சாப்பாட்டுக்கு மட்டும் வரும் ஒரு வெள்ளை பூனை. ரொம்பவே ஒரு சின்ன குடிசை, ஆசை பட்ட மாதிரி வாழ்க்கை இல்லை என்றாலும், புருசன் சம்பாதிக்கும் நாலு காசை வைத்து குடும்பத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் மனைவி.

பகல் முழுவதும் எங்காவது சுத்திவிட்டு மாலை 5-6 மணி ஆனால் மீயாவ் மீயாவ் என்று கூச்சல் இட்டப்படி வீட்டுக்கு வந்துவிடும். குழந்தைக்கும், டீ போடுவதற்கு வாங்கும் பாலில் சிறிது அந்த பூனைக்கும் ஒரு கொட்டாங்குச்சியில் ஊற்றி வந்தாள், தன்னால் முடிந்தபோதெல்லாம். ஆனால் சோறு மட்டும் தினமும்.

வயிற்றுக்கு வறட்சி இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்தது வாழ்க்கை, வருமானம் என்ற ஒன்று இருக்கும் வரை. நிலை நிலைபாட்டில் இல்லை, கணவன் வேலை பார்த்த தொழிற்சாலை மூடப்பட்டது. நிலையான ஒரு வேலை இல்லை. வேலை தேடி அலைந்துகொண்டே இருந்தான். எப்போதாவது கிடைக்கும் கூலி வேலை அதில் வரும் சிறு காசு, அதுதான் இரண்டுவேலை சோத்துக்கு உதவியாக இருந்தது.

பால் கொட்டாங்குச்சியும் காய்ந்தது, தினமும் அதில் எதாவது இருக்காதா என்று பார்த்து பார்த்து ஏமாந்து போகும் பூனை. அதுவரை சமையலரை பக்கமே எட்டி பார்க்காத பூனை, தனக்கு சோறு ஏதும் கிடைக்கவில்லை என்று ஆள் இல்லாத நேரம் எல்லாம் பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்தது. பூனைக்கு பயந்தே வீட்டின் கதவு எப்போதும் சாத்தி இருக்கும்.

புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் தினமும் ஏதாவது ஒரு சண்டை, கடன் மேல் கடன் சேர தொடங்கியது. பசும்பால் அதிகம் தேவை பட்ட நேரம் அது. அக்கம் பக்கம் கடன் வாங்கி பிள்ளைக்கு தினமும் கொஞ்சம் பால் வாங்கினாள். ஒரு பழமொழி உண்டு,

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்

அது இவர்களுக்கு நன்றாக பொருந்தும், பாலின் விலை ஏறியது.

ஒரு நாள் பால் வாங்குவதற்கு சுத்தமாக காசு இல்லை. மனைவி, கணவனிடம் கேட்கிறாள், பால் வாங்க காசு இல்லை, இரண்டு வாரமாக கடனுக்கு வாங்கிக்கொண்டு இருக்கிறேன், இன்றைக்கும் கடனுக்கு கேட்டால் கொடுக்க மாட்டாங்க, காசு இருந்தால் தாறுங்கல் என்று சொன்னாள். ஏண்டி, அடுத்த வேல சோத்துக்கே வழி தெரியல, இதில் உன் புள்ளைக்கு தினமும் பால் கேட்கிறதா என்று கடித்துக்கொண்டே வெளியே சென்றான்.

தூங்கிகொண்டு இருக்கும் பிள்ளை எழுந்துவிட்டால் பசியில் அழ தொடங்கிடுமே, பால் வாங்க காசு இல்லையே என்ன செய்வது என்று புரியாமல் நின்றாள். வீட்டில் எங்காவது காசு இருக்காதா என்று தேடினாள், இறுதியாக அவளது கண்களுக்கு தெரிந்தது தன் குழந்தையின் வெள்ளி தாயத்து. அதை தனக்கு தெரிந்தவர்களிடம் விற்றாள். கிடைத்த பணத்தை கொண்டு பாலும், சமையலுக்கு சிறு பொருட்களும் வாங்கினாள்.

குழந்தை எழுந்ததும் பாலை கொடுக்கலாம் என்று பாலை காச்சி வைத்துவிட்டு துணி அலச சென்றுவிட்டாள். இந்த முறை வீட்டின் கதவை மூட மறந்துவிட்டாள். சிறிது நேரம் கழித்து வீட்டின் உள்ளே பாத்திரம் உருளும் சத்தம் கேட்கிறது, ச்சு ச்சு என்று அலறிக்கொண்டே வீட்டின் உள் ஓடினாள். காட்சிக்கண்டு அதிர்ந்து போனாள்.பால்ச்சட்டி கவிழ்ந்து காச்சி வைத்த பால் முழுவதும் தரையில் கிடக்க, அவள் வந்துவிட்டாலே என்று அவளை பொருட்படுத்தாமல் தரையில் கிடக்கும் பாலை அந்த பூனை நக்கிக்கொண்டே மியாவ் மியாவ் என்று கத்தியது.

குழந்தையின் தாயத்தை வைத்து வாங்கிய பால் இப்படி சந்தியில் போயிற்றே, இனி பிள்ளை பசிக்கு எதை நான் கொடுப்பேன் என்ற கோபமும், இயலாமையும், வறுமையும் அவள் கண்களை மறைக்க, அடுப்பின் அருகில் இருந்த விறகு கட்டையை எடுத்தாள். அந்த வெள்ளை பூனையை அடித்தே கொள்கிறாள். உடல் பிதுங்கி, இரத்தம் வழிய தொடங்கியது, இருந்தும் நிறுத்தவில்லை அவள். தரையில் கிடப்பது பூனை தான என்று யோசிக்கும் வண்ணம் உருமாறும் வரை அடித்தால். சத்தத்தில் குழந்தை அழ தூடங்கியது, இரத்தம் படிந்த கட்டையை ஏந்தியவாறு குழந்தையை பார்த்தாள்.

கண்ணங்கள் நீரில் நனைந்தன, சிகப்பு நிற பூனையின் உதிரங்கள் பாலில் கலப்பதை பார்த்தபடியே நின்றாள்.

BI
Published by BLACKINK
An independent personal publication for short stories, quiet lines, and reflections.